வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வரிக்குதிரை கேக்

அது என்ன வரிக்குதிரை கேக் ? கண்டிப்பாக மேலே உள்ளதல்ல. நாம் செய்யும் கேக்கிலும், வரிக்குதிரை உடலில் உள்ள கோடுகள் போல கோடுகள் வருவதால் இதன் பெயர் வரிக்குதிரை கேக். (பெயர் காரணம் சொல்லியாச்சி) 

உங்களுக்கு தெரியுமா, நமது விரல் ரேகை போல வரிக்குதிரையின் உடலில் உள்ள கோடுகலும் தனித்தன்மையானது. நாம் செய்யபோகும் வரிக்குதிரை கேக்கில் உருவாகும் கோடுகலும் தனித்தன்மையானது. (பெயர் காரணம், மறுபடியும் சொல்லியாச்சி) 


தேவையான பொருட்கள் : 4 பெரிய முட்டைகள்     ;    1 கப் (250 கிராம்) சர்க்கரை ;    1 கப் (250 மிலி ) பால்    ;   எண்ணெய் (ஆலிவ் (அ) உங்கள் விருப்பப்படி) 1 கப் (250 மிலி )   ;    2 கப் (250 கிராம்) மைதா மாவு    ;    1/3 தேக்கரண்டி வெண்ணிலா தூள்     ;     1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்     ;     2 தேக்கரண்டி டார்க் கோக்கோ தூள். 

ஒரு கிண்ணத்தில், முட்டை, வெண்ணிலா மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். பின், பால் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். வேறு ஒரு கிண்ணத்தில், மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். சிறிது, சிறிதாக மாவை, முட்டை, வெண்ணிலா, சர்க்கரை, பால் மற்றும் எண்ணெய் கலவையுடன் சேர்த்து மென்மையாக கலக்கவும். (மாவின் பதம், மென்மையாகவும் இல்லாமல், கட்டியாகவும் இல்லாமல், இடைபட்ட பதத்தில் இருக்கவேண்டும். தேவைப்பட்டால் சிறிது மாவு சேர்க்கலாம்) 

பின், மாவை இரு சம பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியில் கோக்கோ தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (இந்த மாவுதான் கேக்கில் (வரிக்குதிரை) கோடுகள் உருவாக்கும். இப்பொழுது நம்மிடம் இருவகையான மாவு (வெள்ளை மாவு மற்றும் கோக்கோ மாவு) உள்ளது. 

இந்த தருணத்தில், அவ்வனை (Oven) 350°F ( 180°C, Preheat) சூடாக்கவும். வட்ட (அ) சதுர வடிவிலான பேக்கிங் தட்டில் சிறிது எண்ணெய் (அ) பேக்கிங் தாள் வைத்து, தயார்செய்து கொள்ளவும். 

இப்பதான் முக்கியமான பகுதி, (இந்த பகுதியை விரைவாக செய்து முடிக்க வேண்டும்) முதலில், வெள்ளை மாவை (ஒரு தேக்கரண்டி அளவு) எடுத்து பேக்கிங் தட்டின் நடுவில் (center) வைக்கவும் / போடவும். பின் கோக்கோ மாவை (ஒரு தேக்கரண்டி அளவு) எடுத்து (முன்பு வைத்த வெள்ளை மாவின் மீது வைக்கவும் / போடவும். இதே முறையில் வெள்ளை மாவையும், கோக்கோ மாவையும் ஒன்றன் மீது ஒன்றாக வைப்பதன் மூலம், மாவு பேக்கிங் தட்டு முழுவதுமாக பரவும். (முழு அளவு மாவையும் இதே முறையில் பரப்பவும்) 

 மேற்கூறிய முறையில்லாமல் மாவை பேக்கிங் தட்டில் பரப்பினால் அது வெறும் கேக் ! 

 பின்னர், பேக்கிங் தட்டை அவ்வனில் வைத்து சுமார் 30 - 40 நிமிடம் 180° C வெப்பத்தில் பேக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக